பிராண்டு பெயர்
Bio‑Oil®
தயாரிப்பின் பெயர் மற்றும் அளவுகள்
ஸ்கின்கேர் ஆயில் 25 மிலி
ஸ்கின்கேர் ஆயில் 60 மிலி
ஸ்கின்கேர் ஆயில் 125 மிலி
ஸ்கின்கேர் ஆயில் 200 மிலி
அறிகுறிகள்
தழும்புகள் புதிய மற்றும் பழைய தழும்புகளின் தோற்றத்தை மேம்படுத்த உதவுகின்றது. நீட்சிக் கோடுகள் நீட்சிக் கோடுகளின் தோற்றத்தை மேம்படுத்த உதவுகின்றது. மேலும், தோல் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த உதவுவதன் மூலம் நீட்சிக் கோடுகள் உருவாவதன் சாத்தியத்தைக் குறைக்கிறது. சீரற்ற தோல் நிறம் சீரற்ற தோல் நிறத்தின் தோற்றத்தை மேம்படுத்த உதவுகின்றது. வயதான சருமம் முகத்திலும் உடலிலும் வயதான சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. உலர்ந்த தோல் ஈரப்பத இழப்பைக் குறைக்க உதவுகிறது மற்றும் உலர்ந்த தோலின் தோற்றத்தை மேம்படுத்துகிறது.
தோற்றம்
ஆரஞ்சு / இளஞ்சிவப்பு எண்ணெய்.
உருவாக்கம்
வைட்டமின்கள் மற்றும் தாவர சாறுகள் கொண்ட சிறப்பு எண்ணெய்க் கலவை.
மூலப்பொருட்கள்
Paraffinum Liquidum, Triisononanoin, Cetearyl Ethylhexanoate, Isopropyl Myristate, Retinyl Palmitate, Helianthus Annuus Seed Oil, Tocopheryl Acetate, Anthemis Nobilis Flower Oil, Lavandula Angustifolia Oil, Rosmarinus Officinalis Leaf Oil, Calendula Officinalis Extract, Glycine Soja Oil, Bisabolol, Tocopherol, Parfum, Alpha-Isomethyl Ionone, Amyl Cinnamal, Benzyl Salicylate, Citronellol, Coumarin, Eugenol, Farnesol, Geraniol, Hydroxycitronellal, Limonene, Linalool, CI 26100.
ஒவ்வாப்பொருள்கள்
Bio‑Oil® Skincare Oil-இல் 11 ஒவ்வாப்பொருள்கள் உள்ளன. பெரும்பாலான ஒவ்வாப்பொருள்களைப் போலவே, இவை தாவர எண்ணெய்களிலும் நறுமணத்திலும் காணப்படுகின்றன. அவையாவன: ஆல்பா-ஐசோமெத்தில் அயோனோன், அமைல் சின்னமால், பென்சைல் சாலிசிலேட், சிட்ரோனெலோல், கூமரின், யூஜெனோல், ஃபாரன்சோல், ஜெரானியோல், ஹைட்ராக்ஸிசிட்ரோனெலால், லிமோனென் மற்றும் லினாலூல்.
பாதுகாப்பு மதிப்பீடு
Bio‑Oil® Skincare Oil தகுதிபெற்ற நச்சுயியல் நிபுணர்களால் பாதுகாப்பு மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது மற்றும் அது கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உள்ளிட்ட பெரியவர்கள் மற்றும் மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அதன் திட்டமிட்ட பயன்பாட்டிற்குப் பாதுகாப்பானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தழும்பு குறித்த மருத்துவப் பரிசோதனை
பரிசோதனை மையம் proDERM பயன்பாட்டு தோல் ஆராய்ச்சி நிறுவனம், ஹாம்பர்க், ஜெர்மனி. நோக்கம் தழும்புகளின் தோற்றத்தை மேம்படுத்துவதில் Bio‑Oil® Skincare Oil-இன் செயல்திறனை மதிப்பிடுதல். மாதிரி ஆய்வுக்குட்படுநர்கள்: பல்வேறு ஃபிட்ஸ்பாட்ரிக் தோல் வகைகளைக் கொண்ட 36 பெண் பங்கேற்பாளர்கள். தழும்பின் வயது: புதிதாக உருவானது முதல் 3 வருடங்கள் வரை. தழும்பு அமைந்துள்ள இடங்கள்: வயிறு, கால், கை, கழுத்து, முழங்கால், தலையைத் தவிர்த்த உடற்பகுதி, உடலின் மேல்பகுதி. பங்கேற்பாளர்களின் வயது: 18–65. முறையியல் இருபுறமும் மறைக்கப்பட்ட, தற்போக்காக்கப்பட்ட, மருந்துப்போலியால் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு. ஆய்வுக்குட்படுநர்கள் பொருத்தமான தழும்புகளை அல்லது பாதி-பாதி தழும்பு பயன்பாட்டிற்கும் ஒரே ஆய்வுக்குட்படுநருக்குள்ளான ஒப்பீட்டிற்கும் உதவுவதற்குப் போதுமான அளவுக்குப் பெரிய தழும்பைக் கொண்டிருந்தனர். தயாரிப்பு 8 வாரங்களுக்கு தினமும் இரு முறை தடவப்பட்டது; இலக்குப் பகுதியில் கூடுதலான மசாஜ் எதுவும் செய்யப்படவில்லை. வழக்கமான இடைவெளிகளில் மேற்பார்வையின் கீழ் தடவுதல் மேற்கொள்ளப்பட்டது. மதிப்பீடுகள் 0, 2, 4 மற்றும் 8-ஆவது வாரங்களில் நடத்தப்பட்டன. நோயாளி மற்றும் உற்றுநோக்குபவர் தழும்பு மதிப்பீட்டு அளவுகோலில் (Patient and Observer Scar Assessment Scale, POSAS) வரையறுக்கப்பட்டவாறு பல்வேறு தழும்பு அளவுருக்கள் மதிப்பிடப்பட்டன. முடிவு Bio‑Oil® Skincare Oil தழும்புகளின் தோற்றத்தை மேம்படுத்துவதில் ஆற்றல்மிக்கதாக உள்ளது. 2 வாரங்களுக்குப் பிறகு (நாள் 15) தான் புள்ளியியல் ரீதியாக குறிப்பிடத்தக்க முடிவு அடையப்பட்டது, 66% ஆய்வுக்குட்படுநர்களிடம் இது காணப்பட்டது. 8 வாரங்களுக்குப் பிறகு (நாள் 57) 92% ஆய்வுக்குட்படுநர்களிடம் முன்னேற்றம் காணப்பட்டது, இது 2 வாரங்களில் காணப்பட்டதை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் ஆகும். ஆய்வுக் காலம் முழுவதும் POSAS-இன் தொடர்ச்சியான முன்னேற்றம்.
முகப்பரு தழும்பு ஆய்வு
பரிசோதனை மையம் தோல் மருத்துவத் துறை, பெர்கிங் பல்கலைக்கழக முதல் மருத்துவமனை, பெய்ஜிங், சீனா. நோக்கம் சீன ஆய்வுக்குட்படுநர்களிடம் முகத்தில் காணப்படும் முகப்பரு தழும்புகளின் தோற்றத்தை மேம்படுத்துவதில் Bio‑Oil® Skincare Oil-இன் செயல்திறனை மதிப்பிடுவதற்கான ஆராய்ச்சி ஆய்வு. மாதிரி ஆய்வுக்குட்படுநர்கள்: முகத்தில் புதிதாக உருவான (<1 வருடம் பழமையானது) முகப்பரு தழும்புகளைக் கொண்ட 44 சீன ஆய்வுக்குட்படுநர்கள். Bio‑Oil® Skincare Oil சிகிச்சை அறையில் 32 ஆய்வுக்குட்படுநர்களும், சிகிச்சை அளிக்கப்படாத அறையில் 12 ஆய்வுக்குட்படுநர்களும் இடம்பெற்றிருந்தனர். பங்கேற்பாளர்களின் வயது: 14–30. முறையியல் தற்போக்காக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, செயல்திறன் தரநிலையாளர் மறைக்கப்பட்ட ஆய்வு. ஆய்வுக்குட்படுநர்கள் தொடக்க நோய்ப் பரிசோதனை மதிப்பீட்டிலும், அதைத் தொடர்ந்து 1-வார மருந்திலாக் காலகட்டத்திலும் பங்கேற்றனர். தயாரிப்பு தினமும் இருமுறை வீதம் 10 வாரங்களுக்குத் தடவப்பட்டது. வழக்கமான இடைவெளிகளில் மேற்பார்வையின் கீழ் தடவுதல் மேற்கொள்ளப்பட்டது. 0, 4, 8 மற்றும் 10-வது வாரங்களில் நடத்தப்பட்ட மதிப்பீடுகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருந்தன: ஆராய்ச்சியாளரால் நடத்தப்பட்ட உலகளாவிய தழும்பு மதிப்பெண் (Global scarring score, GSS) மதிப்பீடு, குரோமோமீட்டர் கொண்டு நடத்தப்பட்ட முகப்பரு தழும்பின் நிறம் / சிவப்பு குறித்த மதிப்பீடு, சீபமீட்டர் கொண்டு நடத்தப்பட்ட சீபம் அளவீடு, காமெடோன்களின் எண்ணிக்கையை ஆவணப்படுத்தல் மற்றும் தோல் மருத்துவரால் மேற்கொள்ளப்படும் அழற்சி புண்கள் பற்றிய மதிப்பீடு. ஒவ்வொரு வருகையிலும் ஆய்வுக்குட்படுநர்கள் சுய மதிப்பீட்டு கேள்விப்பட்டியல்களையும் பூர்த்தி செய்தனர். முடிவு ஒட்டுமொத்த தோலும் பிரகாசமாக ஆவதோடு எரிதிமா அல்லது மாகுலார் (தட்டையான) முகப்பரு தழும்புகளின் சிவப்பைக் குறைப்பதில் Bio‑Oil® Skincare Oil-இன் திறனில் மருத்துவத் தரநிலையின் சிறந்த முடிவு கிடைத்தது. 84%-க்கும் மேற்பட்ட ஆய்வுக்குட்படுநர்கள் தங்கள் முகப்பரு தழும்புகளின் ஒட்டுமொத்த நிலைமையில் முன்னேற்றத்தை அனுபவித்தனர் என்றும், 90%-க்கும் மேற்பட்டோர் தங்கள் தழும்புகளின் நிறத்தில் முன்னேற்றம் கண்டனர் என்றும் சுய மதிப்பீட்டு கேள்விப்பட்டியலின் முடிவுகள் மூலம் தெரியவந்தது. Bio‑Oil® Skincare Oil-ஐப் பயன்படுத்துவது முகப்பருவை ஏற்படுத்தவோ அல்லது மேலும் மோசமடையவோ செய்யவில்லை அல்லது சீபம் சுரப்பை அதிகரிக்கவில்லை என முகப்பரு எண்ணிக்கை மற்றும் சீபம் மதிப்பீட்டு முடிவுகள் காண்பித்தன.
நீட்சிக் கோடுகள் மருத்துவப் பரிசோதனை
பரிசோதனை மையம் proDERM பயன்பாட்டு தோல் ஆராய்ச்சி நிறுவனம், ஹாம்பர்க், ஜெர்மனி. நோக்கம் நீட்சிக் கோடுகளின் தோற்றத்தை மேம்படுத்துவதில் Bio‑Oil® Skincare Oil-இன் செயல்திறனை மதிப்பிடுதல். மாதிரி ஆய்வுக்குட்படுநர்கள்: பல்வேறு ஃபிட்ஸ்பாட்ரிக் தோல் வகைகள் கொண்ட 38 பெண் பங்கேற்பாளர்கள். நீட்சிக் கோடுகள் ஏற்படுவது: பல்வேறு நிகழ்வுகளில் (கர்ப்பத்திற்குப் பின், எடை குறைதல் அல்லது வளரிளம்பருவத்தின் திடீர் வளர்ச்சி) நீட்சிக் கோடுகள் ஏற்படும் இடங்கள்: அடிவயிறு, தொடைகள் மற்றும் இடுப்பு. பங்கேற்பாளர்களின் வயது: 18–65. முறையியல் இருபுறமும் மறைக்கப்பட்ட, தற்போக்காக்கப்பட்ட, மருந்துப்போலியால் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு. ஆய்வுக்குட்படுநர்கள் பொருத்தமான நீட்சிக் கோடுகளை அல்லது பாதி-பாதி நீட்சிக் கோடு பயன்பாட்டிற்கும் ஒரே ஆய்வுக்குட்படுநருக்குள்ளான ஒப்பீட்டிற்கும் உதவுவதற்குப் போதுமான அளவுக்குப் பெரிய நீட்சிக் கோடுகளைக் கொண்டிருந்தனர். தயாரிப்பு 8 வாரங்களுக்கு தினமும் இரு முறை தடவப்பட்டது; இலக்குப் பகுதியில் கூடுதலான மசாஜ் எதுவும் செய்யப்படவில்லை. வழக்கமான இடைவெளிகளில் மேற்பார்வையின் கீழ் தடவுதல் மேற்கொள்ளப்பட்டது. மதிப்பீடுகள் 0, 2, 4 மற்றும் 8-ஆவது வாரங்களில் நடத்தப்பட்டன. நோயாளி மற்றும் உற்றுநோக்குபவர் தழும்பு மதிப்பீட்டு அளவுகோலில் (Patient and Observer Scar Assessment Scale, POSAS) வரையறுக்கப்பட்டவாறு பல்வேறு தழும்பு அளவுருக்கள் மதிப்பிடப்பட்டன. முடிவு Bio‑Oil® Skincare Oil நீட்சிக் கோடுகளின் தோற்றத்தை மேம்படுத்துவதில் ஆற்றல்மிக்கதாக உள்ளது. 2 வாரங்களுக்குப் பிறகு (நாள் 15) தான் புள்ளியியல் ரீதியாக குறிப்பிடத்தக்க முடிவு அடையப்பட்டது, 95% ஆய்வுக்குட்படுநர்களிடம் இது காணப்பட்டது. 8 வாரங்களுக்குப் பிறகு (நாள் 57) 100% ஆய்வுக்குட்படுநர்களிடம் முன்னேற்றம் காணப்பட்டது, இது 2 வாரங்களில் காணப்பட்டதை விட கிட்டத்தட்ட இரு மடங்கை விட அதிகம் ஆகும். ஆய்வுக் காலம் முழுவதும் POSAS-இன் தொடர்ச்சியான முன்னேற்றம்.
சீரற்ற தோல் நிறம் மருத்துவ ஆராய்ச்சி
பரிசோதனை மையம் தாமஸ் ஜே. ஸ்டீபன்ஸ் & அசோசியேட்ஸ், இன்க்., டெக்சாஸ், ஐக்கிய அமெரிக்கா. நோக்கம் முகத்திலும் கழுத்திலும் இலேசானது முதல் மிதமானது வரையிலான ஒளிச்சேதமடைந்த (வயதான) தோலைக் கொண்ட பெண்களால் பயன்படுத்தப்படும்போது சீரற்ற தோல் நிறம் மற்றும் பல்வண்ணப் புள்ளி நிறமூட்டுதலின் தோற்றத்தை மேம்படுத்துவதில் Bio‑Oil® Skincare Oil-இன் செயல்திறனை மதிப்பிடுதல். மாதிரி ஆய்வுக்குட்படுநர்கள்: முகத்திலும் கழுத்திலும் மருத்துவ ரீதியாகத் தீர்மானிக்கப்பட்ட இலேசானது முதல் மிதமானது வரையிலான ஒளிச்சேதத்துடன் பல்வேறு ஃபிட்ஸ்பாட்ரிக் தோல் வகைகளைக் கொண்ட 67 பெண் பங்கேற்பாளர்கள். Bio‑Oil® Skincare Oil சிகிச்சை அறையில் 35 ஆய்வுக்குட்படுநர்களும், சிகிச்சை அளிக்கப்படாத அறையில் 32 ஆய்வுக்குட்படுநர்களும் இடம்பெற்றிருந்தனர். பங்கேற்பாளர்களின் வயது: 30–70. முறையியல் தற்போக்காக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, செயல்திறன் தரநிலையாளர் மறைக்கப்பட்ட ஆய்வு. ஆய்வுக்குட்படுநர்கள் தொடக்க நோய்ப் பரிசோதனை மதிப்பீட்டிலும், அதைத் தொடர்ந்து 1-வார மருந்திலாக் காலகட்டத்திலும் பங்கேற்றனர். தயாரிப்பு முகத்திலும் கழுத்திலும் தினமும் இரண்டு முறை வீதம் 12 வாரங்களுக்குத் தடவப்பட்டது. அடிப்படை வருகையின்போது மேற்பார்வையின் கீழ் தடவுதல் மேற்கொள்ளப்பட்டது. 0, 2, 4, 8 மற்றும் 12-வது வாரங்களில் மருத்துவ மதிப்பீடுகள் நடத்தப்பட்டன. சீரற்ற தோல் நிறம் மற்றும் பல்வண்ணப் புள்ளி நிறமூட்டுதலின் தோற்றத்திற்காக ஆய்வுக்குட்படுநர்களுக்கு முகம் மற்றும் கழுத்துக்கு தனித்தனியாக மருத்துவ தரமதிப்பீடு வழங்கப்பட்டது. முடிவு Bio‑Oil® Skincare Oil ஒளிச்சேதமடைந்த (வயதான) தோலில் சீரற்ற தோல் நிறம் மற்றும் பல்வண்ணப் புள்ளி நிறமூட்டுதலின் தோற்றத்தை மேம்படுத்துவதில் ஆற்றல்மிக்கதாக உள்ளது. 4 வாரங்களுக்குப் பிறகு முகம் மற்றும் கழுத்து தொடர்பான இரண்டு அளவுருக்களிலும் புள்ளியியல் ரீதியாக குறிப்பிடத்தக்க முடிவு அடையப்பட்டது 12 வாரங்களுக்குப் பிறகு, Bio‑Oil® Skincare Oil சிகிச்சை அறையில் இருந்த ஆய்வுக்குட்படுநர்களில் முகத்தின் சீரற்ற தோல் நிறத்தில் 86% பேரும், முகத்தின் பல்வண்ணப் புள்ளி நிறமூட்டுதலில் 71% ஆய்வுக்குட்படுநர்களும், கழுத்தின் சீரற்ற தோல் நிறத்தில் 69% பேரும், கழுத்தின் பல்வண்ணப் புள்ளி நிறமூட்டுதலில் 60% பேரும் புள்ளியியல் ரீதியாக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்தினர்.
வயதான தோல் மருத்துவப் பரிசோதனை
பரிசோதனை மையம் தாமஸ் ஜே. ஸ்டீபன்ஸ் & அசோசியேட்ஸ், இன்க்., டெக்சாஸ், ஐக்கிய அமெரிக்கா. ஆய்வு 1: முகம் மற்றும் கழுத்து நோக்கம் முகத்திலும் கழுத்திலும் இலேசானது முதல் மிதமானது வரையிலான ஒளிச்சேதமடைந்த (வயதான) தோலைக் கொண்ட பெண்களால் பயன்படுத்தப்படும்போது Bio‑Oil® Skincare Oil-இன் செயல்திறனை மதிப்பிடுதல். மாதிரி ஆய்வுக்குட்படுநர்கள்: முகத்திலும் கழுத்திலும் மருத்துவ ரீதியாகத் தீர்மானிக்கப்பட்ட இலேசானது முதல் மிதமானது வரையிலான ஒளிச்சேதத்துடன் பல்வேறு ஃபிட்ஸ்பாட்ரிக் தோல் வகைகளைக் கொண்ட 67 பெண் பங்கேற்பாளர்கள். Bio‑Oil® Skincare Oil சிகிச்சை அறையில் 35 ஆய்வுக்குட்படுநர்களும், சிகிச்சை அளிக்கப்படாத அறையில் 32 ஆய்வுக்குட்படுநர்களும் இடம்பெற்றிருந்தனர். பங்கேற்பாளர்களின் வயது: 30–70. முறையியல் தற்போக்காக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, செயல்திறன் தரநிலையாளர் மறைக்கப்பட்ட ஆய்வு. ஆய்வுக்குட்படுநர்கள் தொடக்க நோய்ப் பரிசோதனை மதிப்பீட்டிலும், அதைத் தொடர்ந்து 1-வார மருந்திலாக் காலகட்டத்திலும் பங்கேற்றனர். தயாரிப்பு முகத்திலும் கழுத்திலும் தினமும் இரண்டு முறை வீதம் 12 வாரங்களுக்குத் தடவப்பட்டது. அடிப்படை வருகையில் மேற்பார்வையின் கீழ் தடவுதல் மேற்கொள்ளப்பட்டது. 0, 2, 4, 8 மற்றும் 12-வது வாரங்களில் மருத்துவ மதிப்பீடுகள் நடத்தப்பட்டன. ஆய்வுக்குட்படுநர்களுக்கு முகம் மற்றும் கழுத்துக்கு தனித்தனியாக மருத்துவ தரமதிப்பீடு வழங்கப்பட்டது: ஒட்டுமொத்தத் தோற்றம், நுண்ணிய கோடுகள், கரடுமுரடான சுருக்கங்கள், பல்வண்ணப் புள்ளி நிறமூட்டுதல், சீரற்ற தோல் நிறம், பார்வைக்கு கடினமானதாக / மென்மையானதாகத் தோன்றுதல், தொடும்போது கடினமானதாக / மென்மையானதாகத் தோன்றுதல், உறுதியான தோற்றம் மற்றும் தெளிவு (மந்தம்). முடிவு Bio‑Oil® Skincare Oil முகத்திலும் கழுத்திலும் ஒளிச்சேதமடைந்த (வயதான) தோலின் ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்துவதில் ஆற்றல்மிக்கதாக உள்ளது. 8 வாரங்களுக்குப் பிறகு அனைத்து மருத்துவத் தரநிலை செயல்திறன் அளவுருக்களுக்கும் புள்ளியியல் ரீதியாக குறிப்பிடத்தக்க முடிவு அடையப்பட்டது. 12 வாரங்களுக்குப் பிறகு, Bio‑Oil® Skincare Oil சிகிச்சை அறையில் இருந்த 94% ஆய்வுக்குட்படுநர்கள் முகத்தின் ஒட்டுமொத்தத் தோற்றத்தில் புள்ளியியல் ரீதியாக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பித்தனர் மற்றும் 80% ஆய்வுக்குட்படுநர்கள் கழுத்தின் ஒட்டுமொத்தத் தோற்றத்தில் புள்ளியியல் ரீதியாக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பித்தனர். ஆய்வு 2: உடல் நோக்கம் இலேசானது முதல் மிதமானது வரையிலான ஒளிச்சேதமடைந்த (வயதான) தோலைக் கொண்ட பெண்களால் டெகோலெட்டேஜ், காலின் கீழ்ப்பகுதி மற்றும் கையின் தோல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும்போது Bio‑Oil® Skincare Oil-இன் செயல்திறனை மதிப்பிடுதல். மாதிரி ஆய்வுக்குட்படுநர்கள்: முகத்திலும் கழுத்திலும் மருத்துவ ரீதியாகத் தீர்மானிக்கப்பட்ட இலேசானது முதல் மிதமானது வரையிலான ஒளிச்சேதத்துடன் பல்வேறு ஃபிட்ஸ்பாட்ரிக் தோல் வகைகளைக் கொண்ட 67 பெண் பங்கேற்பாளர்கள். Bio‑Oil® Skincare Oil சிகிச்சை அறையில் 35 ஆய்வுக்குட்படுநர்களும், சிகிச்சை அளிக்கப்படாத அறையில் 32 ஆய்வுக்குட்படுநர்களும் இடம்பெற்றிருந்தனர். பங்கேற்பாளர்களின் வயது: 30–70. முறையியல் தற்போக்காக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, செயல்திறன் தரநிலையாளர் மறைக்கப்பட்ட ஆய்வு. ஆய்வுக்குட்படுநர்கள் தொடக்க நோய்ப் பரிசோதனை மதிப்பீட்டிலும், அதைத் தொடர்ந்து 1-வார மருந்திலாக் காலகட்டத்திலும் பங்கேற்றனர். டெகோலெட்டேஜ், கால்களின் கீழ்ப்பகுதி மற்றும் கைகளின் தோல் ஆகிய இடங்களில் 12 வாரங்களுக்கு தினமும் இரு முறை தயாரிப்பு தடவப்பட்டது. அடிப்படை வருகையில் மேற்பார்வையின் கீழ் தடவுதல் மேற்கொள்ளப்பட்டது. 0, 2, 4, 8 மற்றும் 12-வது வாரங்களில் மருத்துவ மதிப்பீடுகள் நடத்தப்பட்டன. ஆய்வுக்குட்படுநர்களுக்கு பின்வரும் செயல்திறன் அளவுருக்களுக்காக டெகோலெட்டேஜ், கால்களின் கீழ்ப்பகுதி மற்றும் கைகள் ஆகிய இடங்களில் தனித்தனியாக மருத்துவ தரமதிப்பீடு வழங்கப்பட்டது: ஒட்டுமொத்தத் தோற்றம், சுருக்கமான அமைப்பு, வறட்சி / செதிள்கள், பார்வைக்கு கடினமானதாக / மென்மையானதாகத் தோன்றுதல், தொடும்போது கடினமானதாக / மென்மையானதாகத் தோன்றுதல். முடிவு Bio‑Oil® Skincare Oil உடலில் ஒளிச்சேதமடைந்த (வயதான) தோலின் ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்துவதில் ஆற்றல்மிக்கதாக உள்ளது. 4 வாரங்களுக்குப் பிறகு அனைத்து தோல் வறட்சிக்கான மருத்துவ தரமதிப்பீட்டு செயல்திறன் அளவுருக்களுக்கும் புள்ளியியல் ரீதியாக குறிப்பிடத்தக்க முடிவு அடையப்பட்டது. 12 வாரங்களுக்குப் பின்னர் Bio‑Oil® Skincare Oil சிகிச்சை அறையில் இருந்த ஆய்வுக்குட்படுநர்களில் 89% பேர் டெகோலெட்டேஜ், கால்களின் கீழ்ப்பகுதி மற்றும் கைகளின் ஒட்டுமொத்தத் தோற்றத்தில் புள்ளியியல் ரீதியாக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்தினர்.
உலர்ந்த தோல் மருத்துவப் பரிசோதனை
பரிசோதனை மையம் தென்னாப்பிரிக்காவின் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஒளி உயிரியல் ஆய்வகம். ஆய்வு 1: கார்னியம் அடுக்கு நீரேற்றம் மற்றும் தடுப்புச் செயல்பாடு நோக்கம் கார்னியம் அடுக்கு (SC) தடுப்புச் செயல்பாடு மற்றும் நீரேற்றத்தை மேம்படுத்த Bio‑Oil® Skincare Oil-ஐ ஒரு முறை தடவுவதன் விளைவை மதிப்பிடுதல். மாதிரி ஆய்வுக்குட்படுநர்கள்: பல்வேறு ஃபிட்ஸ்பாட்ரிக் தோல் வகைகளைக் கொண்ட 40 பெண் பங்கேற்பாளர்கள். சோதனைத் தளம்: அனைத்து ஆய்வுக்குட்படுநர்களின் முன்கையின் உள்ளங்கை பக்கத்தில் சோதனைத் தயாரிப்புகள் தடவப்பட்டன. முறையியல் முதனிலை அளவீடாக கார்னியோமீட்டர் மூலம் தோல் நீரேற்றத்தை மதிப்பிடுதல், இரண்டாம் நிலை மதிப்பீடாக வேப்போமீட்டர் கொண்டு தடுப்புச் செயல்பாட்டை மதிப்பிடுதல். தோல் வறட்சியைத் தூண்டுவதற்காக அளவீடுகள் எடுப்பதற்கு 2 மணிநேரத்திற்கு முன் பங்கேற்பாளர்கள் தங்கள் முன்கைகளை சோப்பு போட்டுக் கழுவினர். அடிப்படை கருவிவழி மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின் Bio‑Oil® Skincare Oil மற்றும் ஒரு மேற்கோள் எண்ணெய் அனைத்து ஆய்வுக்குட்படுநர்களின் முன்கையின் உள்ளங்கை பக்கத்தில் தனித்தனி இடங்களில் தடவப்பட்டன. தயாரிப்பு தடவப்பட்ட உடனேயும், 2 மணிநேரம் கழித்து தயாரிப்புகளைத் துடைப்பதற்கு முன்னரும் பின்னரும் மீண்டும் அளவீடுகள் எடுக்கப்பட்டன. கட்டுப்பாட்டு சிகிச்சையளிக்கப்படாத இடமும் எல்லா நேரங்களிலும் அளவிடப்பட்டது. முடிவு உடனடியாகத் தடவிய பிறகு, சிகிச்சையளிக்கப்படாத கட்டுப்பாட்டுடன் ஒப்பிடும்போது இரண்டு எண்ணெய்களுமே டிரான்ஸ்எபிடெர்மல் நீரிழப்பைக் (Transepidermal Water Loss, TEWL) குறைத்தன. துடைப்பதற்கு 2 மணிநேரம் முன்னர் அதிகரித்திருந்த தோல் தாங்கும் திறன் மதிப்புகள் இரண்டு எண்ணெய்களுக்கும் தோல் நீரேற்றம் அதிகரித்திருப்பதைக் குறிப்பிட்டன. இரண்டு மணிநேரத்திற்குப் பின்னர், தோலின் மேற்பரப்பில் இருந்து எண்ணெய்களைத் துடைத்து எடுத்த பிறகு, மேற்கோள் எண்ணெயுடன் ஒப்பிடும்போது TEWL மதிப்புகள் மேலும் அதிகரித்திருப்பதை Bio‑Oil® Skincare Oil காண்பித்தது, இது ஈரப்பத வெளியீடு அதிகரித்திருப்பதையும் தோலின் நீரேற்றம் அதிகரித்திருப்பதையும் குறிக்கிறது. ஆய்வு 2: வறண்ட தோலின் தோற்றம் நோக்கம் ஈரப்பதமாக்குதல் செயல்திறன் மற்றும் வறண்ட தோலின் நிவாரணத்திற்காக Bio‑Oil® Skincare Oil-ஐ தினமும் இரு முறை பயன்படுத்துவதன் விளைவை மதிப்பிடுதல். மாதிரி ஆய்வுக்குட்படுநர்கள்: 25 பெண் கௌகேசியன் பங்கேற்பாளர்கள். சோதனைத் தளம்: அனைத்து ஆய்வுக்குட்படுநர்களின் வெளிப்புற கீழ் காலில் சோதனைத் தயாரிப்புகள் தடவப்பட்டன. முறையியல் 7-நாள் காலத்திற்கு வறண்ட தோலைத் தூண்ட சோப்பு பயன்படுத்தப்பட்டது. Bio‑Oil® Skincare Oil மற்றும் ஒரு மேற்கோள் எண்ணெய் தினமும் இரு முறை தடவப்பட்டன. 1 மற்றும் 3-ஆம் நாள்களில் தோல் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன. பயிற்சிபெற்ற காட்சி மதிப்பீட்டாளர் மூலம் 2x பெரிதாக்கும் விளக்கைப் பயன்படுத்தி காட்சி மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன. எல்லா நேரங்களிலும் சிகிச்சையளிக்கப்படாத கட்டுப்பாட்டு இடமும் மதிப்பிடப்பட்டது. முடிவு சிகிச்சையளிக்கப்படாத கட்டுப்பாட்டுடன் ஒப்பிடும்போது Bio‑Oil® Skincare Oil மற்றும் மேற்கோள் எண்ணெய் இரண்டுமே தோல் வறட்சியை மேம்படுத்தின. 3-ஆம் நாளன்று Bio‑Oil® Skincare Oil புள்ளியியல் ரீதியாக மேம்பட்டதாக இருந்தது. Bio‑Oil® Skincare Oil மூலம் தோலின் சிகிச்சையளிக்கப்பட்ட இடங்களின் காட்சித் தோற்றத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் வறண்ட தோல் நிவாரணத்தில் அதன் செயல்திறனை உறுதிப்படுத்தின.
கூருணர்வுத் தோல் பரிசோதனை
பரிசோதனை மையம் காம்ப்லைஃப் இத்தாலியா S.r.l, இத்தாலி நோக்கம் Bio‑Oil® Skincare Oil தோல் எரிச்சலை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறை மதிப்பிடுதல். மாதிரி ஆய்வுக்குட்படுநர்கள்: 25 பங்கேற்பாளர்கள்; 19 ஆண்கள் மற்றும் 6 பெண்கள், அனைவரும் லாக்டிக் அமில உணர்திறன் சோதனையின்படி கூருணர்வுத் தோலைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டவர்கள். பங்கேற்பாளர்களின் வயது: 18–65. முறையியல் தற்போக்காக்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு. இரண்டு பகுதிகள் மதிப்பீடு செய்யப்பட்டன: எதிர்மறைக் கட்டுப்பாடு (கனிமமற்ற நீர்) தடவப்பட்ட பகுதி மற்றும் Bio‑Oil® Skincare Oil தடவப்பட்ட பகுதி. சோதனைத் தயாரிப்புகள் Finn Chamber®-ஐப் பயன்படுத்தி 48 மணிநேர காலத்திற்கு பங்கேற்பாளர்களின் கைகளின் பின்பகுதியில் தடவப்பட்டன. பேட்ச் அகற்றப்பட்ட 15 நிமிடங்கள், 1 மணி மற்றும் 24 மணிநேரத்திற்குப் பிறகு முதன்மை தோல் எரிச்சலை மதிப்பீடு செய்ய, ஒரு தோல் மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் தோல் எதிர்வினைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. தோல் எதிர்வினைகள் 0-4 வரையுள்ள அளவுகோலைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்டன (0 என்பது எரிதிமா, நீர்வீக்கம் அல்லது பிற வகை தோல் எரிச்சல்கள் இல்லை என்பதையும், 4 என்பது கடுமையான எரிதிமா மற்றும் நீர்வீக்கத்துடன், தடவிய பகுதியையும் தாண்டி அடர் சிவப்பு நிறத் தோற்றம் மற்றும் விரிவடைந்த வீக்கம் இருக்கின்றது என்பதையும் குறிக்கிறது. முடிவு எந்த ஆய்வுக்குட்படுநர்களும் சோதனைத் தயாரிப்புக்கு பாதக எதிர்வினைகள் எதையும் அனுபவிக்கவில்லை, எல்லா நேரங்களிலும் அனைத்து ஆய்வுக்குட்படுநர்களுக்கும் காட்சி மதிப்பெண் 0 (பூச்சியம்) எனப் பதிவு செய்யப்பட்டது. Bio‑Oil® Skincare Oil-இன் தோலின் பொறுத்துக்கொள்ளும் தன்மை ‘எரிச்சல் இல்லாதது’ எனக் குறிப்பிடப்பட்டது.
காமெடோஜெனிக் சாராத பரிசோதனை
பரிசோதனை மையம் காம்ப்லைஃப் இத்தாலியா S.r.l, இத்தாலி நோக்கம் Bio‑Oil® Skincare Oil முகப்பரு மற்றும் காமெடோன்கள் (பருக்கள்) ஏற்படுத்துவதற்குச் சாத்தியமுள்ளதா எனப் பரிசோதித்தல். மாதிரி ஆய்வுக்குட்படுநர்கள்: 20 பங்கேற்பாளர்கள்; முகப்பரு வருவதற்கு வாய்ப்புள்ள பல்வேறு ஃபிட்ஸ்பாட்ரிக் தோல் வகைகளைக் கொண்ட 14 பெண்கள் மற்றும் 6 ஆண்கள். பங்கேற்பாளர்களின் வயது: 18–65. முறையியல் தற்போக்காக்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு. இந்தத் தயாரிப்பு பங்கேற்பாளர்களின் முதுகின் மேல்பகுதியில் ஒரு வடிதாள் தட்டின் மீது தடவப்பட்டது. பேட்ச்கள் 48 முதல் 72 மணிநேரம் வரை அந்த இடத்திலேயே விடப்பட்டன, அதன் பின் அவை அகற்றப்பட்டு மீண்டும் தடவப்பட்டது. தொடர்ந்து 4 வாரங்களுக்கு மொத்தமாக 12 பேட்ச்கள் தடவப்பட்டன. எதிர்மறைக் கட்டுப்பாடு (கனிமமற்ற நீர்), சோதனைத் தயாரிப்பு (Bio‑Oil® Skincare Oil) மற்றும் நேர்மறைக் கட்டுப்பாடு (அறியப்பட்ட காமெடோஜெனிக் தயாரிப்பாகிய லானோலின் ஆல்கஹால்) ஆகியவற்றை ஒப்பிடுவதன் மூலம் மூன்று பகுதிகள் மதிப்பிடப்பட்டன. ஒவ்வொரு தயாரிப்பைத் தடவுவதற்கு முன்னரும் தடவிய பின்னரும் காமெடோன்கள் காணப்படுவதை ஒப்பிடுவதற்காக ஒவ்வொரு பேட்ச்சையும் அகற்றிய 15 நிமிடங்களுக்குப் பிறகு தோல் மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் தோல் எதிர்வினைகள் மருத்துவ ரீதியாக மதிப்பிடப்பட்டன. முடிவு Bio‑Oil® Skincare Oil காமெடோஜெனிக் இல்லாதது எனக் கண்டறியப்பட்டது. Bio‑Oil® Skincare Oil தடவப்பட்ட பகுதி எதிர்மறைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கணிசமான வித்தியாசம் எதையும் காண்பிக்கவில்லை. நேர்மறைக் கட்டுப்பாடு முகப்பருவைத் தூண்டியது.
உறிஞ்சுதல் ஆய்வு
பரிசோதனை மையம் proDERM பயன்பாட்டு தோல் ஆராய்ச்சி நிறுவனம், ஹாம்பர்க், ஜெர்மனி. ஆய்வு 1: பயிற்சிபெற்ற மதிப்பீட்டாளர்கள் நோக்கம் தரநிலைப்படுத்தப்பட்ட தடவுதல் மற்றும் தேய்த்தலுக்குப் பின் Bio‑Oil® Skincare Oil-இன் உறிஞ்சுதல் விகிதத்தை மதிப்பிடுதல். மாதிரி ஆய்வுக்குட்படுநர்கள்: 22 பயிற்சிபெற்ற மதிப்பீட்டாளர்கள்; 21 பெண்கள் மற்றும் 1 ஆண். சோதனைத் தளம்: சோதனைத் தயாரிப்புகள் மதிப்பீட்டாளர்களின் முன்கையின் உள்ளங்கை பக்கத்தில் தடவப்பட்டன. முறையியல் இருபுறமும் மறைக்கப்பட்ட, தற்போக்காக்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு. Bio‑Oil® Skincare Oil மற்றும் மேற்கோள் எண்ணெய் ஆகியவை மதிப்பீட்டாளர்களின் முன்கையின் உள்ளங்கை பக்கத்தில் ஒதுக்கப்பட்ட பரிசோதனைப் பகுதிகளில் தடவப்பட்டன. மதிப்பீட்டாளர்கள் வரையறுக்கப்பட்ட வேகத்தில் 100 சுழற்சி இயக்கங்களை மேற்கொண்டனர். அதன் பின் மதிப்பீட்டாளர்கள் தயாரிப்புகளின் உறிஞ்சுதலை, ‘மிக மெதுவான உறிஞ்சுதல்’ முதல் ‘மிக வேகமான உறிஞ்சுதல்’ வரையிலான 5-புள்ளி அளவுகோலில் மதிப்பிட்டனர். தயாரிப்பைத் தடவுவதற்கு முன் மற்றும் தடவிய பிறகு 2 நிமிடங்கள் கழித்து என இரண்டு நேரங்களில், தோலில் உள்ள எண்ணெயின் அளவை மதிப்பிட சீபமீட்டர் அளவீடுகள் எடுக்கப்பட்டன. முடிவு Bio‑Oil® Skincare Oil-இன் தோலுக்குள் உறிஞ்சும் தன்மை ’மிக வேகமானது’ அல்லது ‘வேகமானது’ என பெரும்பாலான (77.3%) பயிற்சிபெற்ற மதிப்பீட்டாளர்களால் மதிப்பிடப்பட்டது. இது இரண்டாவது முறையாக சீபமீட்டர் அளவுகோல் மூலம் எடுக்கப்பட்ட கருவிவழி அளவீடு மூலம் சரிபார்க்கப்பட்டது, அதில் மேற்கோள் எண்ணெயுடன் ஒப்பிடும்போது தோலில் ஒட்டியிருக்கும் Bio‑Oil® Skincare Oil-இன் அளவு குறிப்பிடத்தக்க அளவு குறைவாக இருந்தது. ஆய்வு 2: நுகர்வோர் குழு நோக்கம் தரநிலைப்படுத்தப்பட்ட தடவுதல் மற்றும் தேய்த்தலுக்குப் பின் Bio‑Oil® Skincare Oil-இன் உறிஞ்சுதல் விகிதத்தை மதிப்பிடுதல். மாதிரி ஆய்வுக்குட்படுநர்கள்: 100 பங்கேற்பாளர்கள்; 97 பெண்கள் மற்றும் 3 ஆண்கள். சோதனைத் தளம்: அனைத்துப் பங்கேற்பாளர்களின் முன்கையின் உள்ளங்கை பக்கத்திலும் சோதனைத் தயாரிப்புகள் தடவப்பட்டன. முறையியல் இருபுறமும் மறைக்கப்பட்ட, தற்போக்காக்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு. Bio‑Oil® Skincare Oil மற்றும் மேற்கோள் எண்ணெய் ஆகியவை பங்கேற்பாளர்களின் முன்கையின் உள்ளங்கை பக்கத்தில் ஒதுக்கப்பட்ட பரிசோதனைப் பகுதிகளில் தடவப்பட்டன. பங்கேற்பாளர்கள் சோதனைத் தயாரிப்பு ஒவ்வொன்றையும் ஒரு நிமிடம் தேய்த்தனர். அதன் பிறகு பங்கேற்பாளர்கள் தயாரிப்புகளின் உறிஞ்சுதல் திறனை, ‘மிக மெதுவான உறிஞ்சுதல்’ முதல் ‘மிக வேகமான உறிஞ்சுதல்’ வரையிலான 5-புள்ளி அளவுகோலில் மதிப்பிட்டனர். முடிவு Bio‑Oil® Skincare Oil-இன் தோலுக்குள் உறிஞ்சும் தன்மை ’மிக வேகமானது’ அல்லது ‘வேகமானது’ என பெரும்பாலான (72%) பயிற்சிபெற்ற பங்கேற்பாளர்களால் மதிப்பிடப்பட்டது.
திறப்படைப்பு ஆய்வு
பரிசோதனை மையம் பரிசோதனை பேராசிரியர் டாக்டர். ஜே வீச்சர்ஸ் என்பவரால் ரிகானோ லெபாரட்டரிஸ், மிலன், இத்தாலியில் நடத்தப்பட்டது. நோக்கம் Bio‑Oil® Skincare Oil வெர்னிக்ஸ் கேசியோசாவுக்கு ஒத்த திறப்படைப்பு நிலையை நிரூபித்துள்ளதா என்பதை மதிப்பிடுதல். வெர்னிக்ஸ் கேசியோசா அதன் சிறந்த திறப்படைப்பு நிலை காரணமாக தோல் ஈரப்பதமாக்குதலில் ’தங்கத் தரம்’ கொண்டிருப்பதாக ஒப்பனையியல் விஞ்ஞானிகளால் பரவலாகக் கருதப்படுகின்றது. முறையியல் மனித தோலின் மேற்பரப்புப் பண்புகளைப் பிரதிபலிக்கின்ற, Vitro-Skin™ எனப்படும் பகுதி ஊடுருவும் சவ்வினால் மூடப்பட்ட முகவைகளில் அறியப்பட்ட அளவு தண்ணீர் விடப்பட்டது. வெர்னிக்ஸ் கேசியோசா மற்றும் Bio‑Oil® Skincare Oil ஆகியவை சம அளவுகளில் சவ்வின் மீது தடவப்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு முகவைகளில் நீரிழப்பின் விகிதம் அளவிடப்பட்டது. இது சவ்வின் மீது எந்தத் தயாரிப்பும் தடவாமல் இருக்கும்போது ஏற்பட்ட நீரிழப்பின் விகிதத்துடன் ஒப்பிடப்பட்டது. ஒவ்வொரு தயாரிப்புக்கான நீராவி பரிமாற்ற விகிதம் கணக்கிடப்பட்டு g/m²/h அலகில் குறிப்பிடப்பட்டது. முடிவு Bio‑Oil® Skincare Oil ஆனது வெர்னிக்ஸ் கேசியோசாவுக்கு மிகவும் ஒத்த திறப்படைப்பு நிலையை நிரூபித்தது, வெர்னிக்ஸ் கேசியோசாவின் 27.2 உடன் ஒப்பிடும்போது இது 23.5 ஆகப் பதிவாகியது.
பயன்பாடு
எவ்வாறு தடவுவது Bio‑Oil® Skincare Oil முழுமையாக உறிஞ்சப்படும் வரை அது முகத்தின் அல்லது உடலின் மீது வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யப்பட வேண்டும். தயாரிப்பு குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு தினமும் இரண்டு முறை வீதம் தடவப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகின்றது. Bio‑Oil® Skincare Oil-ஐ திறந்த காயம் அல்லது உடைந்த தோல் மீது தடவக் கூடாது. இது புறமருந்து ஒப்பனைப் பூச்சாகப் பயன்படுத்துவதற்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. மேற்பரப்பில் உள்ள தோல் முழுமையாகக் குணமடைந்த உடனேயே இதைத் தழும்பின் மீது பயன்படுத்துவது பாதுகாப்பானது. முடிவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். எவ்வளவு காலம் பயன்படுத்த வேண்டும் காலப்போக்கில் தயாரிப்பின் செயல்திறனை மதிப்பிட உதவுவதற்காக Bio‑Oil® Skincare Oil-இன் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் 8-வார மற்றும் 12-வார காலங்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் இரண்டு வாரங்களுக்குள்ளாகவே தோலின் தோற்றத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும், இந்த முன்னேற்றம் பரிசோதனைகள் நடைபெறும் காலத்தில் மாறாமல் பராமரிக்கப்படுகின்றது அல்லது அதிகரிக்கின்றது எனவும் புள்ளிவிவரப் பகுப்பாய்வு காண்பிக்கின்றது. தோல் பராமரிப்பு வழக்கத்துடன் இணைத்துப் பயன்படுத்தவும் அதிகபட்ச உறிஞ்சுதலுக்கு, Bio‑Oil® Skincare Oil சுத்தம் செய்யப்பட்ட தோலில் தடவப்பட வேண்டும். Bio‑Oil® Skincare Oil ’நீண்ட காலம் வரவேண்டும்’ என்பதற்காக அதை பிற தயாரிப்புகளுடன் கலப்பது அதன் செயல்திறனில் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஈரப்பதமூட்டி, சூரிய ஒளி பாதுகாப்பு லோஷன் அல்லது பிற ஃபேஸ் கிரீம் தடவுவதாக இருந்தால், Bio‑Oil® Skincare Oil முழுமையாக தோலுக்குள் உறிஞ்சிய பிறகு மட்டுமே அதைச் செய்யவும். உடல் முழுவதும் பயன்படுத்த, ஷவர் குளியல் அல்லது சாதாரண குளியலுக்குப் பிறகு Bio‑Oil® Skincare Oil தடவவும். கர்ப்பத்தின்போது பயன்படுத்துதல் கர்ப்பகால நீட்சிக் கோடுகள் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம், ஆனால் அடிவயிறு, தொடைகள், இடுப்பு, முதுகின் கீழ்ப்பகுதி, பிட்டம் மற்றும் மார்பகங்களில் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. கர்ப்பக் கால நீட்சிக் கோடுகள் உருவாவதைத் தடுக்க உதவுவதற்கு, முதலாவது மும்மாதம் தொடங்கி குழந்தையைப் பிரசவிக்கும் வரை இந்தப் பகுதிகளில் தினமும் இரண்டு முறை Bio‑Oil® Skincare Oil தடவுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது. Bio‑Oil® Skincare Oil தொடர்ந்து தடவுவது கர்ப்பகாலத்தில் ஏற்படும் அரிப்பு தொடர்பான நமைச்சல் மற்றும் உலர்ந்த தோலில் இருந்து திறமையான நிவாரணம் அளிக்கிறது. மேலும் இதை கர்ப்பக் காலத்தின்போது ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக ஏற்படும் சீரற்ற தோல் நிறத்தைச் சரிசெய்வதற்கும் பயன்படுத்தலாம். வைட்டமின் A மற்றும் கர்ப்பம் பெண்கள் வழக்கமாக கர்ப்பக் காலத்தில் வைட்டமின் A நிறைந்த ஊட்டச்சத்து துணைப்பொருள்களைக் குறைத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. எனவே வைட்டமின் A கொண்ட தோல் பராமரிப்புத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவது குறித்த பிரச்சனைகள் அவர்களுக்கு இருக்கலாம். தோலின் மீது தடவப்படும் எந்தவொரு பொருளும் அதன் நச்சுத்தன்மை வரம்பை விட அதிக அளவுகளில் காணப்பட்டால் மட்டுமே அது தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். தோலானது ஊடுருவலுக்கு கணிசமான தடுப்பு அரணாக விளங்குவதால், மேற்பரப்பில் தடவப்படும் வைட்டமின் A-இன் சிறு பகுதி மட்டுமே உடலுக்குள் நுழைகிறது. நுகர்வோர் பாதுகாப்புக்கான ஐரோப்பிய ஆணையத்தின் அறிவியல் குழு (Scientific Committee on Consumer Safety, SCCS) ஒப்பனை பகுதிப்பொருள்களாகப் பயன்படுத்தப்படுகின்ற வைட்டமின் A மற்றும் அதன் எஸ்டர்களை மதிப்பீடு செய்துள்ளது. வைட்டமின் A பாடி லோஷன்களில் பயன்படுத்தப்படும்போது ரெட்டினோலுக்கு இணையான பொருள்களின் அதிகபட்ச செறிவு 0.05% ஆக இருக்கும் வரை அது பாதுகாப்பானது என SCCS கருத்துத் தெரிவித்துள்ளது. Bio‑Oil® Skincare Oil ஆனது பாடி லோஷனுக்கு அதிகபட்சமாக அனுமதிக்கத்தக்க செறிவை விட மிகக் குறைவான வைட்டமின் A-ஐக் கொண்டிருப்பதால் கர்ப்பகாலம் முழுவதும் இதைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியும். வைட்டமின் A-ஐக் குறைந்த அளவில் சேர்ப்பதன் மூலம், Bio‑Oil® Skincare Oil கர்ப்பிணிப் பெண்களுக்கு எந்தப் பாதுகாப்பு ஆபத்தும் இன்றி வைட்டமின் A-இன் பலன்களைத் தருகின்றது. ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் கர்ப்பக் காலம் அதிக செறிவு கொண்ட ரோஸ்மேரி எண்ணெய் ஒரு மாதவிடாய்த் தூண்டி எனக் கண்டறியப்பட்டுள்ளதால், அது மாதவிடாய் ஏற்படுவதைத் தூண்டி முன்கூட்டியே பிரசவ வலியைத் தூண்டுவதற்கான சாத்தியம் உள்ளது. இதன் காரணமாக ரேஸ்மேரி எண்ணெயை அதிக செறிவுகளில் பயன்படுத்துகின்ற அரோமாதெரபிஸ்ட் மற்றும் மூலிகை மருத்துவர்கள் கர்ப்பக் காலத்தில் இதைப் பயன்படுத்த வேண்டாம் எனப் பரிந்துரைக்கின்றனர். ஆனாலும், Bio‑Oil® Skincare Oil-இல் உள்ள ரோஸ்மேரி எண்ணெயின் செறிவு மிகவும் குறைவு என்பதால் கர்ப்பக் காலத்தின்போது இதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதாகும். தாய்ப்பால் கொடுக்கும்போது பயன்படுத்துதல் Bio‑Oil® Skincare Oil தாய்ப்பால் கொடுக்கும்போது பயன்படுத்துவது பாதுகாப்பானது, ஆனால் முலைக்காம்புகளில் அதைத் தடவுவதைத் தவிர்க்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தீங்குதரும் விளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியகூறுகள் இல்லை என்றாலும் கூட, பச்சிளம் குழந்தைகள் மிகுந்த உணர்திறன் கொண்டவர்கள் என்பதால் அவர்கள் Bio‑Oil® Skincare Oil-ஐ மிக சிறிய அளவுகளில் கூட விழுங்கிவிடக் கூடாது. மழலைகள் மற்றும் குழந்தைகளிடம் பயன்படுத்துதல் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மீது Bio‑Oil® Skincare Oil பயன்படுத்துவதன் பாதுகாப்பு மதிப்பிடப்படவில்லை. பிறந்தது முதல் சில வருடங்களில், மனித உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சி உள்ளிட்ட பல மாற்றங்கள் நடைபெறுகின்றன. எனவே இது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளிடம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தைகளிடம் இந்தத் தயாரிப்பை கவனமாகத் தடவ வேண்டும் மற்றும் இதை கண்களுக்கு அல்லது வாய்க்கு அருகில் பயன்படுத்தக் கூடாது. சூரிய ஒளியில் பயன்படுத்துதல் Bio‑Oil® Skincare Oil மீது நடத்தப்பட்ட பரிசோதனைகள் இது வேனிற்கட்டியை தீவிரமடையவோ அல்லது அதிகரிக்கவோ செய்வதில்லை எனக் காண்பித்துள்ளன. எனவே சூரிய ஒளியில் இதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது, ஆனாலும் இந்தத் தயாரிப்பு சூரியனின் UVA மற்றும் UVB கதிர்களின் தீங்குதரும் விளைவுகளுக்கு எதிராக எந்தப் பாதுகாப்பும் அளிப்பதில்லை என்பதால் இந்தத் தயாரிப்பை குறைந்தபட்சம் 30 சூரிய ஒளிப் பாதுகாப்புக் காரணி (Sun Protection Factor, SPF) கொண்ட பரந்த நிறமாலை சன்ஸ்க்ரீன் உடன் சேர்த்துப் பயன்படுத்த வேண்டியது முக்கியமாகும். சளி சவ்வுகள் மீது அல்லது அவற்றுக்கு அருகில் பயன்படுத்துதல் Bio‑Oil® Skincare Oil சளி சவ்வுகளுடன் படும் இடங்களைத் தவிர, பிற எல்லாப் பயன்பாடுகளுக்கும் பாதுகாப்பானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது. கதிரியக்கச் சிகிச்சை அல்லது வேதிச் சிகிச்சையுடன் இணைத்துப் பயன்படுத்துதல் Bio‑Oil® Skincare Oil கதிரியக்கத்தை உறிஞ்சக்கூடிய பகுதிப்பொருள்கள் எதையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், கதிரியக்கச் சிகிச்சை அல்லது வேதிச் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நபர்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மருந்துத் தயாரிப்புகளுடன் இணைத்துப் பயன்படுத்துதல் Bio‑Oil® Skincare Oil ஓர் ஒப்பனைத் தயாரிப்பு ஆகும். மருந்துத் தயாரிப்புகளை எடுத்துக்கொள்ளும்போது அவற்றுடன் சேர்த்து இந்தத் தயாரிப்பையும் பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்கு, மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது. கூருணர்வுத் தோல் மீது பயன்படுத்துதல் Bio‑Oil® Skincare Oil-ஐக் கூருணர்வுத் தோல் மீது பயன்படுத்தலாம். கூருணர்வுத் தோலைக் கொண்டிருக்கும் தோலைக் கொண்ட 18-65 வயதுடைய 25 பங்கேற்பாளர்களிடம் நடத்தப்பட்ட தோல் எரிச்சல் குறித்த ஆய்வில், எந்த ஆய்வுக்குட்படுநர்களும் இந்த உருவாக்கத்துக்குப் பாதக எதிர்வினைகள் எதையும் அனுபவிக்கவில்லை. எண்ணெய்ப் பசையுள்ள தோல் மீது பயன்படுத்துதல் Bio‑Oil® Skincare Oil-ஐ எண்ணெய்ப் பசையுள்ள தோல் மீது பயன்படுத்தலாம். முகப்பரு வருவதற்கு வாய்ப்புள்ள தோலைக் கொண்டிருக்கும் 18-65 வயதுடைய 20 பங்கேற்பாளர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், Bio‑Oil® Skincare Oil காமெடோஜெனிக் இல்லாதது எனக் கண்டறியப்பட்டது. முகப்பருவால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள தோல் மீது பயன்படுத்துதல் Bio‑Oil® Skincare Oil முகப்பருவால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள தோல் மீது பயன்படுத்தலாம். முகப்பரு வருவதற்கு வாய்ப்புள்ள தோலைக் கொண்டிருக்கும் 18-65 வயதுடைய 20 பங்கேற்பாளர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், Bio‑Oil® Skincare Oil காமெடோஜெனிக் இல்லாதது எனக் கண்டறியப்பட்டது. முகத்தில் புதிதாக உருவான முகப்பரு தழும்புகள் கொண்ட 14-30 வயதுடைய 44 ஆய்வுக்குட்படுநர்களிடம் நடத்தப்பட்ட முகப்பரு தழும்பு ஆய்வில்; Bio‑Oil® Skincare Oil ஆனது முகப்பருவை ஏற்படுத்தவோ அல்லது மேலும் மோசமடையவோ செய்யவில்லை அல்லது சீபம் சுரப்பை அதிகரிக்கவில்லை என முகப்பரு எண்ணிக்கை மற்றும் சீபம் மதிப்பீட்டு முடிவுகள் காண்பித்தன. ஆனாலும், முகப்பருவால் பாதிக்கப்பட்ட நபர்கள் Bio‑Oil® Skincare Oil பயன்படுத்துவதற்கு முன் மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
தழும்பு உருவாதல்
தழும்பு என்பது தோலில் காயம் ஏற்பட்ட பிறகு குணமடைதல் செயல்முறையின் ஓர் இயற்கையான பகுதியாக உருவாகின்ற கொலாஜன் வளர்ச்சி ஆகும். கொலாஜன் என்பது இயற்கையாகத் தோன்றும் புரதங்களால் ஆனது, இது உடலின் இணைப்புத் திசுவின் முக்கிய அங்கமாக அமைந்துள்ளது. தோலில் ஒரு காயம் ஏற்படும்போது, துல்லியமான குணப்படுத்தலை விட தப்பி வாழ்தலில் கவனம் செலுத்தும் விதமாக, பாதிக்கப்பட்ட பகுதியைச் சரிசெய்ய உடல் முடிந்தவரை விரைவில் செயல்படுகின்றது. காயத்தை குணப்படுத்துவதற்காக அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும் கொலாஜன் தழும்புகளை உருவாக்குகிறது. தழும்பு முதிர்ச்சியடையும்போது எண்ணற்ற மாற்றங்களுக்கு உள்ளாகும் என்றாலும், அது ஒருபோதும் சுற்றியிருக்கும் தோலின் இயல்பான வலிமையைப் பெற முடியாது. தழும்பு ஏற்பட்ட இடத்தில் மயிர்க்கால்களும் வியர்வைச் சுரப்பியும் மீண்டும் வளராது. தழும்பு உருவாதல் பின்வரும் நான்கு நிலைகளைக் கொண்டதாகும்: இரத்தப்போக்குக் கட்டுப்பாட்டு நிலை இது காயம் ஏற்பட்டவுடன் உடனடியாகத் தொடங்கி ஒரு சில மணிநேரங்கள் வரை நீடிக்கின்றது, ஏனெனில் இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த இரத்த நாளங்களைச் சுருங்கச் செய்வதன் மூலம் காயமடைந்த பகுதி தனது இயல்பான நிலையை மீட்டமைக்க முயற்சிக்கின்றது. அதே நேரத்தில் காயமடைந்த உயிரணுக்கள் இரத்த உறைவைச் செயல்படுத்த குறிப்பிட்ட புரதங்களை வெளியிடுவதன் மூலம் சேதமடைந்த நாளங்களை அடைக்கச் செய்து இரத்த இழப்பைக் குறைக்கின்றன. அழற்சி நிலை தொடக்கநிலைக் காயத்திற்குப் பிறகு மூன்று முதல் நான்கு நாள்கள் காலத்திற்குத் தோன்றுகின்ற சிவப்பு மற்றும் வீக்கம் நோய்த்தடுப்பு பிரதிச்செயலின் புலப்படும் குறிகாட்டி ஆகும். வெள்ளை இரத்த உயிரணுக்கள் காயத்தில் உள்ள அழுக்கையும் பாக்டீரியங்களையும் சுத்தம் செய்கின்ற வேதிப்பொருள்களை வெளியிடுகின்றன. பெருகி வளரும் நிலை இது கிட்டத்தட்ட மூன்றாம் நாளில் தொடங்கி சுமார் மூன்று வாரங்களுக்குத் தொடர்கிறது. இந்த நிலையில் காயத்தை மூடிக் கட்ட ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு செயல்முறைகள் நிகழ்கின்றன: மணித்திரளாக்கம்: காயத்தை நிரப்ப கொலாஜனை விரைவாக உருவாக்குவதற்காக காயம் ஏற்பட்ட இடத்தில் பெருகி வளரும் உயிரணுக்கள் மீது எலும்புப் புரத உயிரணுக்கள் (கொலாஜனை ஒருங்கிணைப்பதற்குப் பொறுப்புள்ள உயிரணுக்கள்). எபிதீலியலைசேஷன்: காயத்தை மூட தோலின் ஒரு அடுக்கு உருவாக்கப்படுகிறது. காயம் சுருங்குதல்: குறைபாட்டைக் குறைக்கும் முயற்சியில் காயம் ஒன்றாக இழுக்கப்படுகிறது. முதிர்வு நிலை இந்த ’மறுவடிவமைத்தல்’ நிலை தோராயமாக மூன்று வாரங்களுக்குப் பின்னர் தொடங்குகிறது மற்றும் காயத்தின் அளவு மற்றும் ஆழத்தைப் பொறுத்து இது இரண்டு வருடங்கள் வரை தொடரலாம். இந்த நேரத்தின்போது, தழும்பின் இறுதி இயல்பைத் தீர்மானிக்கும் விதமாக காயம் ஏற்பட்ட பகுதியில் ஏற்பட்ட அழுத்தங்களுக்கு இணங்க நாரிழைகள் மறுசீரமைக்கப்படுவதால் கொலாஜன் தொடர்ந்து உருவாக்கப்படுகிறது. காயம் ஏற்பட்ட பகுதியை தழும்பு மூடிப் பாதுகாக்கின்ற அதே நேரத்தில், அதை எளிதில் தகர்த்துவிடவும் முடியும். தழும்புத் திசு பொதுவாக இயல்பான தோலின் 70% நீட்சி வலிமையை வெளிப்படுத்துகிறது.
தழும்புகளின் வகைகள்
குணமடைதல் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும் என்பதால், தழும்பின் இறுதித் தோற்றம் நபருக்கு நபர் மாறுபடும். தழும்பு எப்படி இருக்கும் என்பதை தோலின் வகை, தழும்பு அமைந்துள்ள இடம், காயத்தின் வகை, நபரின் வயது மற்றும் சீரான ஊட்டச்சத்து நிலை போன்ற காரணிகள் தீர்மானிக்கும். தழும்பின் வகைகளை பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம்: பொதுவான தழும்புகள் இந்தத் தழும்புகள் அழற்சியாகவும் கருமையாகவும் காணப்படுகின்றன, ஆனால் காலைப்போக்கில் இவை தட்டையாகவும் எளிதில் புலப்படாததாகவும் மெல்லிய கோடு போன்ற தழும்பாகவும் மாறுகின்றன. அட்ராபிக் தழும்புகள் இந்தத் தழும்புகள் தோலின் மேற்பரப்புக்குக் கீழ் குழிவுகள் அல்லது சிறுவெட்டுகளை ஏற்படுத்துகின்றன. முகப்பரு அல்லது சின்னம்மையால் ஏற்படும் தழும்புகள் இவற்றுக்கு உதாரணங்கள் ஆகும். ஹைப்பர்ட்ராபிக் தழும்புகள் இந்தத் தழும்புகள் தோலின் மேற்பரப்புக்கு மேல் புடைத்தவாறு உள்ளன. இவை அதிகப்படியான அளவு கொலாஜனைக் கொண்டுள்ளன, ஆனால் எப்போதும் உண்மையான காயத்தில் எல்லைகளுக்குள்ளேயே உள்ளன. கீலாய்டு தழும்புகள் கீலாய்டு தழும்புகளை ஹைப்பர்ட்ராபிக் தழும்புகளுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. இவையும் மேற்புடைத்தவாறு உள்ள தழும்புகள் என்றாலும், கீலாய்டுகள் அசல் காயத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் பரவியுள்ளன என்பதில் இவை வேறுபடுகின்றன. அவை காலப்போக்கில் தொடர்ந்து வளரக்கூடும் மற்றும் வழக்கமாக வெட்டி நீக்கப்பட்ட பிறகு மீண்டும் மீண்டும் தோன்றலாம். தழும்பு சுருங்குதல் தோல் நிரந்தரமாக இறுக்கமடையும்போது தழும்பு சுருங்குதல் நிகழ்கிறது. அவை பெரும்பாலும் தழும்புகள் குறுக்காக ஏற்படும்போது, அல்லது செங்கோணங்களில் தோல் மடிப்பு உண்டாகும்போது உருவாகின்றன. தழும்புத் திசுவை நீட்ட முடியாது என்பதால் அது இயல்பான இயக்கத்தைத் தடை செய்யலாம். தழும்பு சுருக்கங்கள் பெரும்பாலும் தீக்காயங்களைத் தொடர்ந்து நிகழ்கின்றன. நீட்சிக் கோடுகள் (கோடுகள்) எடையில் விரைவான மாற்றங்கள் ஏற்படும் காலங்களில் (உ.ம். பதின்மவயதில் திடீர் வளர்ச்சி, கர்ப்பம்) போர்த்தியுள்ள தோலை விட உடல் வேகமாக விரிவடையும்போது தோல் திசுவில் ஏற்படும் உட்புறக் கிழிசல்களின் காரணமாக நீட்சிக் கோடுகள் தோன்றுகின்றன. இந்தக் கிழிசல்கள் தானாகவே சரிசெய்து கொள்ளும்போது ஏற்படும் தழும்புகளே நீட்சிக் கோடுகள் எனப்படுகின்றன.
நீட்சிக் கோடு உருவாதல்
மருத்துவ ரீதியாகச் சொன்னால் நீட்சிக் கோடுகள், அல்லது கோடுகள், என்பவை தழும்பின் மற்றொரு வடிவம் ஆகும், ஆனாலும், பெரும்பாலானோர் அவற்றைத் தழும்பிலிருந்து வேறுபட்டவையாகவே பார்க்கின்றனர். நீட்சிக் கோடுகள் என்பவை தோல் வேகமாக விரிவடையும் காலங்களில், உதாரணமாக கர்ப்பிணிப் பெண்கள், பாடி பில்டர்கள் மற்றும் வளரிளம்பருவத்தினரிடையே திடீர் வளர்ச்சி ஏற்படும்போது தோலின் மீது உருவாகின்ற கோடுகள் ஆகும். உண்மையில் அவை, அவற்றின் பெயரில் உள்ளவாறே நீட்சியடைவதன் காரணமாக ஏற்படுகின்றன. வெளிர்நிறத் தோலைக் கொண்டவர்களில் இந்த நீட்சிக் கோடுகள் இளஞ்சிவப்பு நிறத்திலும், அடர்நிறத் தோலைக் கொண்டவர்களில் இந்த நீட்சிக் கோடுகள் சுற்றியுள்ள தோலை விட மங்கலான நிறத்திலும் காணப்படுகின்றன. தோல் இயற்கையில் நெகிழ்வுத்தன்மை கொண்டதாகும். தோல் திசுவின் அடியில் அமைந்துள்ள டெர்மிஸில் காணப்படும் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் காரணமாக இந்த நீட்சித்தன்மை கிடைக்கின்றது. கொலாஜன் என்பது இயற்கையாகத் தோன்றும் புரதங்களின் தொகுப்பால் ஆனது மற்றும் இது உடலின் இணைப்புத் திசுவின் முக்கிய அங்கமாக விளங்குகிறது. இயற்கையாகத் தோன்றும் புரதங்களால் ஆன எலாஸ்டினும் இணைப்புத் திசுவில் காணப்படுகின்றது மற்றும் இது அதன் நெகிழ்வுப் பண்புகளை வழங்குகிறது. இந்த இணைப்புத் திசு விரிந்து சுருங்குவதன் மூலம் உடலின் தொடர்ச்சியான இயக்கத்திற்கு ஏதுவாக டெர்மிஸ் செயல்பட உதவுகிறது, ஆனால் திடீரென எடை அதிகரிக்கும் காலங்களில் அதைச் சரிசெய்யப் போதுமான நேரம் அதற்குக் கிடைக்காமல் போகலாம், அதனால் தோல் திசுவின் உட்புறத்தில் கிழிசல்கள் ஏற்படுகின்றன. இந்தக் கிழிசல்கள் தாங்களாகவே சரிசெய்துகொள்ளும்போது அவை ஏற்படுத்தும் தழும்புகளையே நாம் நீட்சிக் கோடுகள் என்கிறோம். இதற்கு ஒப்பான சிறந்த உதாரணம் சுருள்வில் நீட்டப்படுதல் ஆகும். நீங்கள் ஒரு சுருள்வில்லை இயல்பான மீள்திறன் வரம்பு எனப்படும் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் நீட்டும்போது, அது திரும்பவும் தனது அசல் நிலைக்குத் திரும்புவதன் மூலம் மீண்டும் மீண்டும் தனது உண்மையான அளவை அடைகின்றது. ஆனாலும், சுருள்வில்லை நீங்கள் அதன் இயல்பான மீள்திறன் வரம்புக்கு அப்பால் இழுக்கும்போது, சுருள்வில் நிரந்தரமாக நீட்டப்பட்டு அது தனது அசல் அளவை மீண்டும் அடைவதில்லை. நீட்சிக் கோடுகள் குறிப்பிடத்தக்க மருத்துவப் பிரச்சனை எதையும் குறிப்பதில்லை என்றாலும், கோடுகள் ஏற்பட்டவர்களுக்கு அது உணர்ச்சிப்பூர்வ மனவேதனையை ஏற்படுத்தலாம். அவை உருவாவதற்கான சாத்தியக்கூறு தோலின் வகை, வயது, பரம்பரை, உணவு மற்றும் தோலின் நீரேற்றம் ஆகியவற்றைப் பொருத்து மாறுபடுகின்றது. நீட்சிக் கோடு உருவாதலின் நிலைகள் பின்வருமாறு: நிலை ஒன்று தொடக்கநிலை நீட்சிக் கோடுகள் வெளிர் நிறத்தில் தோன்றுகின்றன மற்றும் அது நமைச்சல் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம். நீட்சிக் கோடுகளைச் சுற்றி அருகில் உள்ள தோல் ‘தட்டையானதாக’ அல்லது ‘மெல்லியதாக’ தோற்றமளிக்கலாம். நிலை இரண்டு நீட்சிக் கோடுகளின் நீளம் படிப்படியாக அதிகரிக்கின்றது மற்றும் அகலம் அடர்நிறம் கொண்டதாகவும் அதிகத் தெளிவானதாகவும் மாறுகின்றது. நிலை மூன்று நீட்சிக் கோடுகள் முதிர்ச்சியடைந்து தோலின் இறுக்கம் குறையும்போது அவை மங்க ஆரம்பித்து வெளிர் நிறமாக ஆகின்றன. அவை சற்றுத் தளர்வாகவும், ஒழுங்கற்ற வடிவம் அல்லது நீளம் கொண்டதாகவும் தோன்றலாம்.
கர்ப்பக் கால நீட்சிக் கோடுகள் தோன்றுதல்
50% முதல் 90% வரையிலான கர்ப்பிணிப் பெண்களுக்கு நீட்சிக் கோடுகள் ஏற்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. நீட்சிக் கோடுகள் அடிவயிறு, தொடைகள், இடுப்பு, முதுகின் கீழ்ப்பகுதி, பிட்டம் மற்றும் மார்பகங்களில் உருவாகலாம் - இவை கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் மாற்றங்களின் காரணமாக தோல் அதிகமாக நீட்சியடையும் பகுதிகள் ஆகும். அவை உடலில் எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம் என்றாலும், அதிக அளவு கொழுப்பு சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களில் அவை தோன்றுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. நீட்சிக் கோடுகள் பொதுவாக கர்ப்பக் காலத்தின் மூன்றாவது மும்மாதங்களின்போது (சுமார் ஆறு அல்லது ஏழாவது மாதத்தில்) கண்ணுக்குப் புலனாகும் என்றாலும், சில பெண்களுக்கு முதலாவது மும்மாதத்திலேயே நீட்சிக் கோடுகள் ஏற்படுவதைக் காண முடிகின்றது. ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதன் காரணமாக பிரசவத்திற்காக தோல் தயாராவதன் காரணமாகவும் கர்ப்பக் கால நீட்சிக் கோடுகள் ஏற்படலாம். இந்த ஹார்மோன்கள் அதிக அளவு நீரை தோலுக்குள் உறிஞ்சுகின்றன, அதனால் கொலாஜன் நாரிழைகளுக்கு இடையிலான பிணைப்பு தளர்வுறுகிறது. இதன் காரணமாக தோல் நீட்சியடையும்போது அது எளிதில் கிழிந்து நீட்சிக் கோடுகள் உருவாகின்றன. நீட்சிக் கோடுகள் உருவாவதற்கான சாத்தியக்கூறு தோலின் வகை, வயது, பரம்பரை, உணவு மற்றும் தோலின் நீரேற்றம் ஆகியவற்றைப் பொருத்து மாறுபடுகின்றது.
தயாரிப்பு
Bio‑Oil® Skincare Oil தயாரிப்பு ஒப்பனைப் பொருள்களுக்கான ISO 22716:2007-இன் சிறந்த தயாரிப்பு நடைமுறை (Good Manufacturing Practice, GMP) நிபந்தனைகளை உறுதிப்படுத்துகிறது. Bio‑Oil® Skincare Oil தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்ற அனைத்து மூலப் பொருள்களும் பகுப்பாய்வுச் சான்றிதழ் (Certificate of Analysis, COA) உடன் வருகின்றன மற்றும் அனைத்து பொதியிடுதல் பொருள்களும் உறுதிப்படுத்தும் சான்றிதழ் (Certificate of Conformance, COC) உடன் வருகின்றன. தரக் கட்டுப்பாட்டுப் பரிசோதனைகளில் ஒப்புதல் பெறப்படும் வரை மூலப் பொருள்கள் அல்லது பொதியிடுதல் பொருள்கள் எதுவும் தயாரிப்புக்கு விடுவிக்கப்படுவதில்லை. கலக்கப்பட்ட ஒவ்வொரு Bio‑Oil® Skincare Oil பேட்ச்சுக்கும் ஒரு பிரத்தியேக பேட்ச் எண் வழங்கப்படுகின்றது. பேட்ச்சில் இருந்து ஒரு மாதிரி எடுக்கப்பட்டு, அதன் தோற்றம், தெளிவு, வாசனை, ஸ்பெக்ட்ரோஃபோட்டோமெட்ரியால் அடையாளம் கண்டறிதல், அடர்த்தி, பாகுமை மற்றும் நுண்ணியிரியல் ஆகியவற்றிற்காக ஆய்வகத்தில் பரிசோதிக்கப்படுகின்றது. இந்த மாதிரி ஆறு வருடங்களுக்கு பத்திரமாகத் தக்கவைக்கப்படுகின்றது. Bio‑Oil® Skincare Oil-இன் நிரப்புதலும் பொதியிடுதலும் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. தூசி மூலமான மாசுபாடு ஏற்படுவதைத் தடுக்க காற்றானது அதிக திறன் கொண்ட துகள் காற்று (High Efficiency Particulate Air, HEPA) வடிகட்டும் அமைப்பு வழியாகச் செலுத்தப்படுகின்றது. உற்பத்திப் பிரிவுகளில் பணிபுரியும் பணியாளர்கள் தொப்பி, முகக் கவசங்கள், முக மறைப்புகள், கையுறைகள் மற்றும் ஷூ கவர்கள் போன்றவற்றை அணிகின்றனர். அசாதாரணக் குறைபாடுகளுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பிரிவுகளில் இருந்து வழக்கமான இடைவெளிகளில் மாதிரிகள் எடுக்கப்பட்டு தரக் கட்டுப்பாட்டுத் துறையால் ஆய்வு செய்யப்படுகின்றன. பாட்டில், அட்டைப்பெட்டி மற்றும் ஷிப்பர் மீது பேட்ச் எண் அச்சிடப்படுகின்றது மற்றும் தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு பேட்ச்சில் இருந்தும் தக்கவைப்பு மாதிரி எடுக்கப்பட்டு நான்கு வருடங்களுக்குப் பாதுகாத்து வைக்கப்படுகின்றது. Bio‑Oil® Skincare Oil தயாரிப்பில் தீங்கு விளைவிக்கின்ற மாசு உமிழ்வுகள், அபாயகரமான கழிவு அல்லது கழிவு நீர் எதுவும் உருவாக்கப்படுவதில்லை.
சேமித்து வைப்பதற்கான அறிவுறுத்தல்கள்
Bio‑Oil® Skincare Oil குளிர்ச்சியான இடத்தில், நேரடி சூரிய ஒளி படாமல் வைக்கப்பட வேண்டும்.
மறுசுழற்சி செய்தல்
அனைத்து Bio‑Oil® Skincare Oil பொதியிடுதல் பொருள்களும் (பாட்டில், மூடி மற்றும் அட்டைப்பெட்டி) மறுசுழற்சி செய்யக்கூடியவை ஆகும்.
திறந்த பின் பயன்பாட்டுக் காலம் (PERIOD AFTER OPENING, PAO)
Bio‑Oil® Skincare Oil 36 மாத PAO-ஐக் கொண்டுள்ளது. திறந்த பிறகு இந்தக் காலத்திற்குள் இத்தயாரிப்பைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது மற்றும் நுகர்வோருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் பயன்படுத்த முடியும்.
சான்றளிப்புகள்
Bio‑Oil® Skincare Oil ஹலால் மற்றும் கோஷர் சான்றிதழ் பெற்றுள்ளது.
பாதக எதிர்வினைகள்
அனைத்து ஒப்பனைத் தயாரிப்புகளைப் போன்றே Bio‑Oil® Skincare Oil பாதுகாப்பான நச்சுயியல் விவரக்குறிப்பு கொண்டுள்ளது மற்றும் இது தொடர்பான சர்வதேச விதிமுறைகளைப் பூர்த்தி செய்கிறது என்றாலும், Bio‑Oil® Skincare Oil பயனர்கள் தயாரிப்பைப் பயன்படுத்தும்போது பாதக எதிர்வினையை எதிர்கொள்ளக்கூடும். ஏதேனும் ஒரு பாதக எதிர்வினை ஏற்பட்டால், தயாரிப்பைப் பயன்படுத்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பாதக தோல் எதிர்வினை அறிகுறிகள் தோல் தடிப்பு, வீக்கம் மற்றும் அழற்சி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கலாம், இது பொதுவாக தயாரிப்பு தடவப்பட்ட பகுதியில் ஏற்படும். இந்த எதிர்வினைகளுடன் சேர்த்து அரிப்பு மற்றும் சிறிதளவு அசௌகரியம் ஆகியவையும் இருக்கலாம். பெரும்பாலான நிகழ்வுகளில், பாதக எதிர்வினைகள் தயாரிப்பு பயன்படுத்துவதை நிறுத்திய பிறகு இரண்டு முதல் மூன்று நாள்களுக்குள் மறைந்துவிடும். தோல் தனது அசல் நிலைக்குத் திரும்பும் வரை, எதிர்வினை படிப்படியாகத் தணிந்து வரும் என்பதால் தோல் வறண்டும் செதில் போன்றும் காணப்படலாம். Bio‑Oil® Skincare Oil தடவுவதனால் ஏற்படுவதற்குச் சாத்தியமுள்ள ஒவ்வாமை எதிர்வினை தொடர்பாக ஏதேனும் கவலை இருந்தால், இதைப் பரிசோதிக்க ஓர் எளிமையான ஒவ்வாமைப் பரிசோதனை செய்துகொள்வது நலம். இதைச் செய்ய சிறிதளவு தயாரிப்பை எடுத்து முன்கையின் உட்புறத்தில் தடவி, 24 மணிநேரத்தில் ஏதேனும் எதிர்வினை ஏற்படுகின்றதா எனக் காத்திருந்து பார்க்க வேண்டும். உணரக்கூடிய தோல் சிவத்தல் (எரிதிமா) அல்லது தோலில் இலேசான வீக்கம் (நீர்வீக்கம்) போன்றவை காணப்படுவது ஒவ்வாமை எதிர்வினையின் அறிகுறியாக இருக்கலாம்.
விலங்குகளிடம் பரிசோதிக்கப்படவில்லை
Bio‑Oil® Skincare Oil மற்றும் அங்கமாக உள்ள மூலப்பொருள்கள் ஒப்பனை நோக்கங்களுக்கான விலங்கு பரிசோதனை தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றித் தயாரிக்கப்பட்டுள்ளன. Bio‑Oil® Skincare Oil அல்லது அதன் பகுதிப் பொருள்கள் எதுவும், Bio‑Oil அல்லது அதன் மூலப்பொருள் விநியோகிப்பாளர்கள் எவராலும் விலங்குகளின் மீது பரிசோதிக்கப்படவில்லை.
சுத்தமான தாவரப்பொருள்
Bio‑Oil® Skincare Oil விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட பகுதிப்பொருள்கள் எதையும் கொண்டிருக்கவில்லை.
எதிர்பாராமல் விழுங்குதல்
Bio‑Oil® Skincare Oil நச்சுத்தன்மை அற்றது என்பதால் Bio‑Oil® Skincare Oil எதிர்பாராமல் விழுங்கப்படும் பட்சத்தில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உணர்வுகளுக்கு அப்பால் வேறு எந்தப் பாதக விளைவுகளும் ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை. ஆனாலும், குறிப்பாக பச்சிளம் பிள்ளை அல்லது குழந்தையால் எதிர்பாராமல் விழுங்கப்படுவது நிகழ்ந்தால், மருத்துவ ஆலோசனை பெறுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
தோற்றத்தில் மாற்றம்
Bio‑Oil® Skincare Oil ஆனது காலெண்டுலா, செவ்வந்திப் பூ, லாவெண்டர் மற்றும் ரோஸ்மேரி தாவரத்தின் சாறுகள், அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் வைட்டமின் A ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இவை அனைத்துமே ஒளி உணர்திறன் கொண்டவை ஆகும். சூரிய ஒளி படுமாறு வைத்திருப்பது காலப்போக்கில் நிறமாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனாலும் இது தயாரிப்பின் செயல்திறனைப் பாதிப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, Bio‑Oil® Skincare Oil பாட்டில்கள் UV உறிஞ்சியைக் கொண்டுள்ளன. இருந்தபோதிலும் இந்தத் தயாரிப்பு நேரடி சூரிய ஒளி படாத இடத்தில் சேமித்து வைக்கப்பட வேண்டும்.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட தேதி
22 ஆகஸ்டு 2023